

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 21) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆலி போப் 46 ரன்களும், ஜேமி ஸ்மித் 33 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, பிரண்டன் டக்கெட் 2 விக்கெட்டுகளும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்களும், கேமரூன் கிரீன் 24 ரன்களும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் இதுவரை 6 ஓவர்கள் வீசியுள்ள பென் ஸ்டோக்ஸ் 23 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலாண்டின் விக்கெட்டுகளை பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்.
ஆஷஸ் தொடர் தொடங்கும் முன்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் பந்துவீச்சில் ஈடுபடுவாரா எனக் கிண்டலாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.