

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பேசிய சர்ச்சையான கருத்துக்கு கேப்டன் டெம்பா பவுமா பதிலளித்துள்ளார்.
அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தனது கருத்துகளை கவனமாக வெளியிட வேண்டும் என டெம்பா பவுமா கூறினார்.
தாமதமாக டிக்ளேர் செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் சர்சையான கருத்தைப் பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்திய வீரர்கள் நீண்ட நேரத்தை களத்தில் செலவிட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அவர்களை மண்டியிடச் செய்ய (க்ரோவல் - Grovel) விரும்பினோம். அவர்களை ஆட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றி, முடிந்தால் கடைசி நாளில் வென்று பாருங்கள் எனச் சொல்ல நினைத்தோம் என்றார்.
க்ரோவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இனவெறி அடிப்படையில் தலைக்குனிய வைப்பது, மண்டியிடச் செய்வது, நிலத்தில் ஊர்ந்து செல்வது எனப் பல பொருள்கள் உள்ளதால் இந்தியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியதாவது:
இன்று காலையில்தான் பயிற்சியாளர் பேசியது தெரியவந்தது. நான் போட்டியில் கவனமாக இருந்ததால் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
சுக்ரி 60 வயதை நெருங்குகிறார். அவர் தனது கருத்துகளில் கவனமாக இருக்க வேண்டும். அதேவேளையில் சிலரும் எல்லை மீறியுள்ளார்கள். (பவுமாவை கிண்டல் செய்யும்படி பும்ரா பேசியதைக் குறிப்பிடுகிறார்).
வேண்டுமென்றே சொல்லாவிட்டாலும் பயிற்சியாளர் சிந்தித்து பேச வேண்டும் என பவுமா நன்றாகப் பேசினார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.