

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது, இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகத் தரத்திலான வீரர்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் அனுபவத்தையும் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதை எப்போதும் நம்புகிறேன்.
அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப் பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ரோஹித், கோலி இருவரும் முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இருவரும் விளையாட வாய்ப்பிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.