

சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரே 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, விதர்பா முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மாத்ரேவின் முதல் சதம் இதுவாகும். அவர் 53 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நேற்று (நவம்பர் 27) நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.