

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை யார் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று (நவம்பர் 27) ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமில் மிஷாரா 76 ரன்களும், குசல் மெண்டிஸ் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் கேப்டன் சல்மான் அகா அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, உஸ்மான் கான் 33 ரன்களும், முகமது நவாஸ் மற்றும் சைம் ஆயுப் தலா 27 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஈஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே அணி முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது.
ராவல்பிண்டியில் நாளை (நவம்பர் 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இதையும் படிக்க: கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.