
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தினர். ரவீந்திர ஜடேஜா 176 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 129 இன்னிங்ஸ்களில் 79* சிக்ஸர்கள் விளாசி தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
ரிஷப் பந்த் - 90 சிக்ஸர்கள் (82 இன்னிங்ஸ்களில்)
வீரேந்திர சேவாக் - 90 சிக்ஸர்கள் (178 இன்னிங்ஸ்களில்)
ரோஹித் சர்மா - 88 சிக்ஸர்கள் (116 இன்னிங்ஸ்களில்)
ரவீந்திர ஜடேஜா - 79 சிக்ஸர்கள் (129 இன்னிங்ஸ்களில்)
எம்.எஸ்.தோனி - 78 சிக்ஸர்கள் (144 இன்னிங்ஸ்களில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.