
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 4) அறிவித்தது. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ஷுப்மன் கில்லுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியைக் கேப்டனாக ஷுப்மன் கில் நன்றாக வழிநடத்தினார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவருக்கு மற்றொரு புதிய பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியை வழிநடத்தப் போகிறார். வெள்ளைப் பந்து போட்டிகளில் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
நேர்மையாக கூறவேண்டுமென்றால், ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படாதது எனக்கு சிறிது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏனெனில், அவர் அண்மையில் இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்தார். வெள்ளைப் பந்து போட்டிகளில் ரோஹித் சர்மா இந்திய அணியின் தூண் போன்றவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தால், அதற்கு இன்னும் நீண்ட நாள்கள் இருக்கின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.