
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். சிறப்பாக விளையாடிய அவர் 176 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேலும், 4 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார். சிறப்பாக செயல்பட்டு அசத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்திய அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா,11-வது முறையாக ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளார். அதில் 10 முறை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளார். இதன் மூலம், சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ள முன்னாள் வீரர் கும்ப்ளேவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே 9 முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றவர்கள் பட்டியலிலும் ஜடேஜா இணைந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 14 ஆட்ட நாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க ரவீந்திர ஜடேஜாவுக்கு இன்னும் நான்கு ஆட்ட நாயகன் விருதுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 14 முறை (200 போட்டிகள்)
ராகுல் டிராவிட் - 11 முறை (163 போட்டிகள்)
ரவீந்திர ஜடேஜா - 11 முறை (86* போட்டிகள்)
ரவிச்சந்திரன் அஸ்வின் - 10 முறை (106 போட்டிகள்)
விராட் கோலி - 10 முறை (123 போட்டிகள்)
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் (இந்தியாவில்)
ரவீந்திர ஜடேஜா - 10 முறை (50* போட்டிகள்)
அனில் கும்ப்ளே - 9 முறை (63 போட்டிகள்)
விராட் கோலி - 8 முறை (55 போட்டிகள்)
சச்சின் டெண்டுல்கர் - 8 முறை (94 போட்டிகள்)
ரவிச்சந்திரன் அஸ்வின் - 7 முறை (65 போட்டிகள்)
இதையும் படிக்க: அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா? ரவீந்திர ஜடேஜா கொடுத்த தரமான பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.