
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் முதல் தர போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு போட்டிகளில் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். டஸ்மானியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் சதம் விளாசி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் அவர் 206 பந்துகளில் 160 ரன்கள் குவித்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 பேட்டராக வலம் வந்த மார்னஸ் லபுஷேன், அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. மேலும், சர்வதேசப் போட்டிகளில் மார்னஸ் லபுஷேனின் மோசமான ஃபார்ம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் கடைசியாக லபுஷேன் சதம் விளாசியிருந்தார். அதன் பின், இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேசப் போட்டிகளில் ஒரு சதம் கூட விளாசவில்லை.
கடந்த 16 டெஸ்ட் போட்டிகளாக மார்னஸ் லபுஷேன் ஒரு சதம்கூட விளாசவில்லை. இந்த 16 போட்டிகளில் அவர் 24.74 என்ற சராசரியுடன் 668 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 90.
அவர் விளையாடிய கடந்த 49 சர்வதேசப் போட்டிகளில் அவரால் ஒரு முறைகூட சதம் விளாச முடியவில்லை. இந்த 49 போட்டிகளில் அவர் 28.74 என்ற சராசரியுடன் 1466 ரன்கள் குவித்துள்ளார். அதில் 12 அரைசதங்கள் அடங்கும்.
இந்த நிலையில், ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் லபுஷேன் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம், அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார் எனவும், டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் விரைவில் மீண்டும் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசியுள்ள லபுஷேன், மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிக்க: லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.