
உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 47.5 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டிவைன் 98 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ப்ரூக் ஹால்லிடே 45 ரன்களும், ஜியார்ஜியா பிலிம்மர் 31 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாரிஸேன் காப், அயபோங்கா காஹா, நடின் டி கிளர்க் மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தஸ்மின் பிரிட்ஸ் சதம் விளாசல்
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 40.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 89 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சூன் லூஸ் 83 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கேப்டன் லாரா வோல்வர்ட் மற்றும் மாரிஸேன் காப் தலா 14 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லீ தஹுஹு மற்றும் ஜெஸ் கெர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய தஸ்மின் பிரிட்ஸுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.