
ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவருக்கு அந்த மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.
அதன் படி, ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதுக்கான போட்டியாளர்களாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் இடம்பெற்றுள்ளனர்.
அபிஷேக் சர்மா
அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அபிஷேக் சர்மா, 314 ரன்கள் குவித்தார். அதில் 3 அரைசதங்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய அவர் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 931 ரேட்டிங் புள்ளிகள் பெற்று வரலாறு படைத்தார்.
குல்தீப் யாதவ்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார்களில் ஒருவரான குல்தீப் யாதவ், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பிரையன் பென்னட்
ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட்டுக்கு கடந்த மாதம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. கடந்த மாதத்தில் 9 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 55.22 என்ற சராசரியுடன் 497 ரன்கள் குவித்தார்.
இலங்கை மற்றும் நமீபியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர், ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க பிராந்திய இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற்றதற்கு பிரையன் பென்னட்டின் சிறப்பான பேட்டிங்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரில் ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.