
ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் பேட்டர்களுக்கான தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இருப்பினும், உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 8 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 23 ரன்களும் எடுத்தார்.
இந்த நிலையில், ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் தொடர்வது முக்கியத்துவம் பெறுகிறது.
791 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திலும், 731 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஷிவர் பிரண்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி (713 ரேட்டிங் புள்ளிகள்) மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசிய தென்னாப்பிரிக்க அணியின் தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனர் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளனர். தஸ்மின் பிரிட்ஸ் இரண்டு இடங்களும், ஆஷ்லே கார்டனர் ஏழு இடங்களும் முன்னேறியுள்ளனர். 706 ரேட்டிங் புள்ளிகளுடன் தஸ்மின் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், 697 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஷ்லே கார்டனர் 5-வது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் ஏழு இடங்கள் முன்னேறி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் எடுத்ததன் மூலம், பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமின் தரவரிசையில் 10-வது இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சை பொருத்தவரை, இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 792 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியிலிருந்து முதல் 10 இடங்களுக்குள் தீப்தி சர்மா மட்டுமே உள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் அவர் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.