
ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவருக்கு அந்த மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.
அதன் படி, ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன், பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமின் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தன் மூலம், சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். கடந்த மாதத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி மந்தனா, 77 என்ற சராசரியுடன் 308 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 58 ரன்கள், 117 ரன்கள் மற்றும் 125 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமின், 3 போட்டிகளில் 293 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடம் பிடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் 272 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான பங்களிப்பினால் தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் அடுத்தடுத்து சதங்கள் (101 ரன்கள், 171 ரன்கள்) விளாசி அசத்தினார் தஸ்மின் பிரிட்ஸ்.
ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வெல்லும் அளவுக்கு மூவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களில் ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.