
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (அக்டோபர் 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஜெய்ஸ்வால் சதம் விளாசல்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கே.எல்.ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின், ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியும், சாய் சுதர்சன் அரைசதம் கடந்தும் அசத்தினர். சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மன் கில் நிதானமாக விளையாட, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அவ்வப்போது பந்தினை பவுண்டரிக்கு விரட்டினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.