
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் நேற்று (அக்டோபர் 10) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். கேப்டன் ஷுப்மன் கில் 196 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். நிதீஷ் குமார் ரெட்டி 43 ரன்களும், துருவ் ஜுரெல் 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜான் கேம்ப்பெல் 10 ரன்களிலும், சந்தர்பால் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அலிக் அதனாஸ் 84 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் ராஸ்டன் சேஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
சாய் ஹோப் 31 ரன்களுடனும், டெவின் இம்லாச் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவைக் காட்டிலும் 378 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.