
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் அணியில் இல்லாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக இருக்கக் கூடும் என அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நாளை (அக்டோபர் 12) தொடங்குகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் அணியில் இல்லாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக இருக்கக் கூடும் என அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெம்பா பவுமா அணியின் மிகவும் முக்கியமான பேட்டர். அழுத்தமான சூழல்களில் அவர் மிகவும் அற்புதமாக விளையாடக் கூடியவர். அவர் தென்னாப்பிரிக்க அணிக்காக என்ன செய்துள்ளார் என்பதைக் கூற வேண்டிய தேவை இருக்காது என நினைக்கிறேன். கேசவ் மகாராஜ் அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளர். ஃபிளாட்டான ஆடுகளங்களிலும் அவர் மிகவும் அற்புதமாக பந்துவீசக் கூடியவர். டெம்பா பவுமா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் அணியில் இல்லாதது எங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். அதே நேரத்தில், மற்ற வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக இதனைப் பார்க்கிறேன்.
முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அவர் ஆட்டத்தின் போக்கினை மாற்றக் கூடிய திறன் படைத்தவர். இதுபோன்ற ஆடுகளங்களில் பிரேவிஸ் போன்று விளையாடக் கூடிய ஒருவர் கண்டிப்பாக அணியில் வேண்டும்.
கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் விளையாடியது போன்றே இந்த முறையும் விளையாட வேண்டும். அதற்கு எங்களுக்கு இந்த சுழற்சியின் தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியது மிகவும் முக்கியம். இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு நாங்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்க அணி கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: என்னுடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: உசைன் போல்ட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.