
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர்கள் இருவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முடிவு கட்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் சவாலாக இருக்கப் போகிறது. சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் திறமைகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால்,ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே மிகவும் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், சிறப்பாக செயல்படுவார்கள்.
இந்திய அணி எந்த ஒரு பயமும் அழுத்தமுமின்றி விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியின் இந்த ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவரும். ஆனால், அதற்கு ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், இந்திய அணி நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது என்றார்.
இதையும் படிக்க: ஐசிசி விருதினை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.