
செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, 7 போட்டிகளில் 314 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவரது சராசரி 44.85 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 200 ஆகவும் இருந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளையும் எடுத்து அசத்தினார்.
ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் இடம்பெற்ற நிலையில், விருதினை அபிஷேக் சர்மா தட்டிச் சென்றார்.
ஐசிசியின் சிறந்த வீரர் விருது வென்றது குறித்து அபிஷேக் சர்மா பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணி சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உதவியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அதன் காரணமாகவே, இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. கடினமான சூழல்களில் இருந்து வெற்றியைப் பதிவு செய்யும் இந்திய அணியில் அங்கம் வகிப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். மூன்று போட்டிகளில் அவர் 58 ரன்கள், 117 ரன்கள் , 125 ரன்கள் முறையே எடுத்தார். கடந்த மாதத்தில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 308 ரன்கள் குவித்தார்.
ஐசிசியின் சிறந்த வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சித்ரா அமின் இடம்பெற்ற நிலையில், ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்று அசத்தியுள்ளார்.
சிறந்த வீராங்கனைக்கான விருது வென்றது குறித்து ஸ்மிருதி மந்தனா பேசியதாவது: இது போன்ற ஐசிசி விருதுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துசக்தியாக இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே எப்போதும் என்னுடைய நோக்கமாக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.