
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் காயம் காரணமாக வெளியேறியதால் மார்னஸ் லபுஷேனுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி நாளை மறுநாள்(அக்.19) தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 பேட்டராக வலம் வந்த ஆட்டக்காரர் மார்னஸ் லபுஷேன், அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.
மேலும், சர்வதேசப் போட்டிகளில் மார்னஸ் லபுஷேன் சோபிக்கவில்லை. இதனால், அணியில் இருந்து அதிரடியாக கலட்டிவிடப்பட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் கடைசியாக லபுஷேன் சதம் விளாசியிருந்தார். அதன் பின், இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேசப் போட்டிகளில் ஒரு சதம்கூட விளாசவில்லை.
கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதுவும் அணித் தேர்வர்கள் மத்தியில் விவாதப் பொருளானது.
இந்த நிலையில், தனது திறமையை நிரூபிக்க உள்ளூர்ப் போட்டிகளில் களமிறங்கிய லபுஷேன், ஒன் டே கப் தொடரில் தஸ்மானியாவுக்கு எதிராக 105 ரன்களும், விக்டோரியாவுக்கு எதிராக 130 ரன்களும் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்களில் முதலிடத்தைப் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து செஃபீல்டு ஷீல்டு தொடரில் தஸ்மானியாவுக்கு எதிராக 160 ரன்களும், குயின்ஸ்லாந்துக்கு எதிராக நேற்று 159 ரன்களும் விளாசினார்.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக விலகியுள்ள 26 வயதான கேமரூன் கிரீனுக்குப் பதிலாக மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்ப் போட்டிகளில் தொடர் ஆதிக்கத்தால் மீண்டும் தனது இடத்தை மார்னஸ் லபுஷேன் தக்கவைத்துள்ளார். இதனால், மார்னஸ் லபுஷேன், தேசிய அணியில் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.