
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஸா ஹீலி போல இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
நேற்றையப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் அலிஸா ஹீலி அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். போப் லிட்ச்ஃபீல்டு அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஸா ஹீலி போல இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நன்றாக செயல்பட்டுள்ளார். மிகப் பெரிய ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஸா ஹீலியைப் போன்று ஹர்மன்பிரீத் கௌர் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் கடந்த இரண்டு முக்கியமானப் போட்டிகளிலும் அலிஸா ஹீலி மிகவும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரிடமிருந்தும் இதனையே நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.