

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இணையவுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை (அக்டோபர் 25) மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஓய்விலிருந்த ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இணையவுள்ளார்.
ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் மட்டுமின்றி, இளம் வீரர் மஹ்லி பியர்டுமேனும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இணையவுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு போட்டிகளிலும், ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவுள்ளனர்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 20 வயதாகும் பியர்டுமேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியில் பியர்டுமேன் அங்கம் வகித்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்காக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கிளன் மேக்ஸ்வெல்லுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.