

ஸ்மிருதி மந்தனாவுடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியதன் ரகசியத்தை தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் பகிர்ந்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு ஏற்கனவே 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 4-வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
நியூசிலாந்துக்கு எதிராக நவி மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஸ்மிருதி மந்தனா 109 ரன்கள் எடுத்தும், பிரதீகா ராவல் 122 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவுக்கும் தனக்கும் இடையில் மிகவும் சிறப்பான புரிதல் இருப்பதாலேயே வெற்றிகரமாக செயல்பட முடிவதாக பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டதாவது: எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் எளிமையாக இருக்கும். எனக்கு எப்படி விளையாடத் தோன்றுகிறதோ, அவ்வாறு விளையாட ஸ்மிருதி என்னை அனுமதிப்பார். அவர் விளையாடும்போது, அவருடைய ஆட்டத்தில் நானும் குறுக்கிட மாட்டேன். எங்களுக்கு இடையிலான உரையாடல் எப்படி ரன்கள் குவிப்பது, பெரிய ஸ்கோரை எவ்வாறு இலக்காக நிர்ணயிப்பது, சேஸிங்கில் எவ்வாறு ஆட்டத்தின் சூழலுக்கேற்ப விளையாடுவது என்பது குறித்தே இருக்கும்.
இந்த மாதிரியான கணக்கிடுதல் தொடர்பான விஷயங்களில் ஸ்மிருதி மந்தனா மிகவும் நன்றாக செயல்படக் கூடியவர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணிக்கு மிகவும் முக்கியமான ரன்களை அவர் எடுத்தார். அவர் அதிகம் விளையாடிய சொந்த ஆடுகளத்தில் மீண்டும் ஒரு முறை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் தொடக்க வீராங்கனைகளாக இணைந்து களமிறங்கி வருகின்றனர். கடந்த டிசம்பரிலிருந்து இந்த இணை 7 முறை 100 ரன்களுக்கும் அதிகமாக முதல் விக்கெட்டுக்கு ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஐந்து முறை 100 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளது.
இதுவரை ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் இணை 23 இன்னிங்ஸ்களில் 1,799 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.