

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மேத்யூ ரென்ஷா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மிட்செல் மார்ஷ் 41 ரன்களும், மேத்யூ ஷார்ட் 30 ரன்களும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் 29 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ரோஹித், கோலி அசத்தல்; இந்தியா அபார வெற்றி
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், ஷுப்மன் கில் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அசத்தினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டபோதிலும், கடைசிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததில்லை என்ற வரலாறு தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.