

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அசத்தினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
50-வது சர்வதேச சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார்.
இதுவரை ரோஹித் சர்மா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 33 சதங்கள், டி20 போட்டிகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார். மேலும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட சதங்கள் விளாசியுள்ள ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையும் ரோஹித் சர்மா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள்
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் சர்மா 6 சதங்கள் விளாசியுள்ளார். தலா 5 சதங்களுடன் இந்தப் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், குமார் சங்ககாரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.