

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அசத்தினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
விராட் கோலி சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 74 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா ஒருநாள் போட்டிகளில் 14234 ரன்கள் எடுத்திருந்ததே இரண்டாவது அதிகபட்சமாக இருந்து வந்தது. அதனை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 18426 ரன்கள் (452 இன்னிங்ஸ்களில்)
விராட் கோலி - 14255 ரன்கள் (293 இன்னிங்ஸ்களில்)
குமார் சங்ககாரா - 14234 ரன்கள் (380 இன்னிங்ஸ்களில்)
ரிக்கி பாண்டிங் - 13704 ரன்கள் (365 இன்னிங்ஸ்களில்)
சனத் ஜெயசூர்யா - 13430 ரன்கள் (433 இன்னிங்ஸ்களில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.