

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (அக்டோபர் 26) தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேமி ஸ்மித் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் (2 ரன்கள்), ஜோ ரூட் (2 ரன்கள்), ஜேக்கோப் பெத்தேல் (2 ரன்கள்), ஜோஸ் பட்லர் (4 ரன்கள்), சாம் கரண் (6 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த நிலையில், கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஓவர்டான் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. ஜேமி ஓவர்டான் நிதானமாக விளையாட, ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஜேமி ஓவர்டான் 54 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும்.
நியூசிலாந்து தரப்பில் ஸகாரி ஃபோல்க்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கோப் டஃபி 3 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து வெற்றி
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 91 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மைக்கேல் பிரேஸ்வெல் 51 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லூக் வுட் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவது சந்தேகம்: ரோஹித் சர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.