

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் விலகியுள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நாளை மறுநாள் முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கவுள்ளன.
குவாஹாட்டியில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 30 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் நேற்று விளையாடியபோது, பிரதிகா ராவலுக்கு முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, காயம் ஏற்பட்டதால் நாக் அவுட் போட்டிகளில் பிரதிகா ராவல் விளையாட மாட்டார். இது இந்திய அணிக்கு மிகவும் துரதிருஷ்டவசமான சூழல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் பிரதிகா ராவல் மிகவும் சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் இந்த தொடரில் 51.33 சராசரியுடன் 308 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி தனது முதல் உலகக் கோப்பை சதத்தை அவர் பதிவு செய்தார்.
தொடக்க வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து பிரதிகா ராவல் மிகவும் அற்புதமாக விளையாடினார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் விளையாடுவதும் சந்தேகம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.