

சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 29) தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: அதிரடியாக விளையாடும் அணுகுமுறையுடன் இந்திய அணி களமிறங்குவதால், சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அதிரடியாக விளையாடும்போது, இதுபோன்ற தவிர்க்க முடியாத சில தோல்விகளும் இருக்கும்.
30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து எளிதில் சூர்யகுமார் யாதவால் அவர் மீதான விமர்சனங்களைத் தவிர்க்க முடியும். ஆனால், அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என நாங்கள் ஆலோசித்துள்ளோம். அதன் காரணமாக அவர் அதிரடியாக விளையாடுகிறார்.
தற்போது அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் ரன்கள் குவிக்கத் தொடங்கிவிட்டால், அவரும் பொறுப்பினை பகிர்ந்து கொள்வார். டி20 கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரர்களை நாங்கள் மதிப்பிடுவதில்லை. அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முயற்சி செய்கையில், அடிக்கடி தோல்விகள் ஏற்படும்.
சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறந்த மனிதர். சிறந்த மனிதர்கள் சிறந்த தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவர் இயல்பாக விளையாடுவது டி20 வடிவிலான கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறார். தோல்விகளுக்கு பயப்படக் கூடாது என எங்களது முதல் உரையாடலில் இருந்து பேசி வருகிறோம். மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக மாற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நான் செயல்படவில்லை. இந்திய அணியை அச்சமின்றி சுதந்திரமாக விளையாடும் அணியாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிகளில், கேட்ச்சுகளை தவறவிடுவது, தவறான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பது, எளிதில் ரன்கள் எடுக்கும் விதமாக தவறாக பந்துவீசுவது போன்றவை குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டாம் என வீரர்களிடம் கூறினேன். மனிதர்கள் தவறு செய்வார்கள். இந்திய அணி நிர்வாகத்தில் கூறும் கருத்துகளை மட்டுமே வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
தவறுகள் செய்வதற்கு ஒருபோதும் பயப்படப் போவதில்லை என நானும், சூர்யகுமார் யாதவும் கூறியிருக்கிறோம். போட்டி எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு வீரர்கள் அச்சமின்றி விளையாட வேண்டும். அச்சத்துடன் விளையாடுவது எதிரணிக்கு சாதகமாக அமையும். நமக்கு இருக்கும் திறமைக்கு, அச்சமின்றி விளையாடினால் எல்லாம் சிறப்பாக அமையும் என்றார்.
கடந்த மாதம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 72 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.