ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
ரோஹித் முதலிடம்
சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50 ஆவது சதத்தையும் ரோஹித் சர்மா பூர்த்தி செய்திருந்தார்.
இந்த தொடரில், அதிகபட்ச ஸ்கோராக ரோஹித் சர்மா 202 ரன்கள் குவித்த நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா அதிக ரன்கள் குவித்த நிலையில், சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 36 புள்ளிகள் அதிகரித்து 781 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவந்த ஷுப்மன் கில், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் உள்ளார்.
சச்சின் சாதனை முறியடிப்பு
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இதுவரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரராக சச்சின் இருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 38 வயது 73 நாள்களில் சச்சின் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது 38 வயது 182 நாள்களில் ரோஹித் ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், சர்வதேச ஒருநாள் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்து பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.