

ஆஸ்திரேலிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பரவும் தகவலை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில், கேட்ச் பிடிக்க முயன்ற இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கீழே விழுந்ததில் இடது விலா எலும்பில் அடிபட்டது.
பின்னர், அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் மண்ணீரலில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரத்த கசிவு நிறுத்தப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், பிசிசிஐ செயலர் அதனை மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
“ஷ்ரேயாஸ் மிகமிக நன்றாக இருக்கிறார். மருத்துவர் எதிர்பார்த்ததைவிட அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக விரைவாக குணமடைந்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் தனது வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். அவரது காயம் மிகவும் ஆபத்தானது, ஆனால் அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு நேற்று மாற்றப்பட்டார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்காரணமாக அவரின் உடல்நிலை மருத்துவர்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
அவர் அனைவருடனும் நன்றாக பேசி, சிரித்துக் கொண்டுள்ளார். ஏற்கெனவே செவிலியர்களுடன் நகைச்சுவை செய்யத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.