

ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.
அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெரி 77 ரன்களும் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஆஷ்லே கார்டன்ர் 63 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர். பெத் மூனி 24 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிராந்தி கௌத், அமன்ஜோத் கௌர் மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பின்னர், 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* (14 பவுண்டரிகள்) ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89 ரன்களும்(10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரிச்சா கோஷ் 26 ரன்களும், தீப்தி 24 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கிம் கார்த், சதர்லாண்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
லீக் சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 331 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப் பிடித்திருந்ததே ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. தற்போது 339 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி சேஸிங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.2) மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.