

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் நேற்று (அக். 30) நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி இந்திய அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பேசுகையில், “இந்தத் தொடர் முழுவதுமே எல்லாருமே சிறப்பாக பங்களித்ததாக நினைக்கிறேன். அதனால்தான் தற்போது இங்கு நிற்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நாங்கள் எங்களால் முடிந்தளவு செய்தோம். போட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்தினோம். வாய்ப்புகளையும் உருவாக்கினோம். ஆனால், அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை” என்றார்.
அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த 35 வயதான அலிசா ஹீலி, “நான் அங்கு இருக்கமாட்டேன். அடுத்தச் சுற்றுக்கு அதுதான் அழகு. அடுத்தாண்டின் நடுப்பகுதியில் டி20 உலகக் கோப்பை நடைபெறவிருக்கிறது. எங்கள் அணியினருக்கு மிகவும் உற்சாகமாகவுள்ளது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட் அணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம்” என ஓய்வு முடிவு குறித்து சூசகமாகத் தெரிவித்தார்.
இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அலிசா ஹீலி, 3,563 ரன்களைக் குவித்துள்ளார். அதில், 7 சதங்களையும், 18 அரைசதங்களையும் விளாசியுள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ஹீலி 299 ரன்கள் குவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.