
இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் 2027 உலகக் கோப்பைக்கு தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி இந்தத் தொடரை இழந்தது, அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பின்னர், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.
கோப்பையை வென்ற பின்னர், கடந்த 6 ஆண்டுகளில் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி அதில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வென்ற போதிலும் இங்கிலாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது.
கத்துக்குட்டி அணி எனக் கருதப்பட்ட ஆப்கானிஸ்தானைவிட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து கீழே இருக்கிறது. மேலும், முதலிடத்தில் இருக்கும் இந்தியாவைவிட 37 புள்ளிகள் குறைவாக இருக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் 14 அணிகளுக்கான இடத்தைப் பிடிக்க தகுதிச் சுற்று ஆட்டங்களை விளையாடும் நிலைக்கு இங்கிலாந்து அணி தள்ளப்படும்.
2027 உலகக் கோப்பையை நடத்தும் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகளில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே நேரடியாகத் தகுதிபெற்றிருந்தாலும், முழு அந்தஸ்து பெற்ற அணி என்ற தகுதியைப் பெறாத நமீபியா தகுதிச் சுற்றில் விளையாடும் நிலையில் உள்ளது.
போட்டியை நடத்தும் இரண்டு நாடுகளைத் தவிர்த்து தரவரிசைப் பட்டியலில் உள்ள 8 நாடுகள் நேரடியாகத் தகுதிபெறும்.
உலகக் கோப்பைக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளதால், தவறை சரிசெய்ய இங்கிலாந்து அணி கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.