
ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடிய முதல் 5 போட்டிகளிலும் அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்க இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் கவனம் ஈர்த்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.
லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க இளம் வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்க் சிறப்பாக விளையாடி 77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். நேற்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் அரைசதம் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் மேத்யூ ப்ரீட்ஸ்க் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் குவித்த ரன்கள்
150 ரன்கள் (148 பந்துகளில்) - நியூசிலாந்துக்கு எதிராக
83 ரன்கள் (84 பந்துகளில்) - பாகிஸ்தானுக்கு எதிராக
57 ரன்கள் (56 பந்துகளில்) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
88 ரன்கள் (78 பந்துகளில்) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
85 ரன்கள் (77 பந்துகளில்) - இங்கிலாந்துக்கு எதிராக
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 7) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.