
முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி அசத்தியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 170 ரன்கள் எடுக்க, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
171 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. ஐக்கிய அரபு அமீரக வீரர் ஆசிஃப் கான் முதல் மூன்று பந்துகளில் 4,6,2 ரன்கள் எடுத்து, கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையை உருவாக்கினார்.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஃபரீத் அகமது அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் அற்புதமாக வீசினார். அதன் பின், கடைசி பந்தில் ஆசிஃப் கானின் விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஐக்கிய அரபு அமீரகம், 4-வது மற்றும் கடைசி லீக் போட்டியிலும் தோல்வியடைந்து ஆறுதல் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டது.
இந்த முத்தரப்பு தொடரில் நாளை (செப்டம்பர் 7) நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.