
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் துபே தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபேவின் மிகச் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். நேற்றையப் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 4 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு, பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ரகசியத்தை ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய அணியில் இடம்பெற்றதிலிருந்து பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல்லுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அவர் எனது பந்துவீச்சில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக குறிப்பிட்ட சில அறிவுரைகளை வழங்கினார். அவர் கொடுத்த அறிவுரைகளை கேட்டு அதன்படி பயிற்சி மேற்கொண்டேன்.
ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பந்து வீசுமாறு கூறினார். அதேபோன்று, மெதுவாக பந்துவீசுவது, பந்துவீச ஓடி வருவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுரை வழங்கினார். பந்துவீச்சில் உங்களது பங்களிப்பு அணிக்கு முக்கியமாக தேவைப்படும் என தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் இருவரும் என்னிடம் கூறினர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.