
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (செப்டம்பர் 9) தொடங்கியது. இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி, அதன் அடுத்தப் போட்டியில் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வெளிப்புற காரணிகளால் வீரர்களின் கவனம் சிதறக்கூடாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்திய அணி வீரர்கள் போட்டியில் மட்டும் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் நல்ல அணி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மற்ற விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
நன்றாக விளையாடி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் அதன் வேலையைப் பார்த்துக் கொள்ளும். வீரர்கள் அவர்கள் வேலையை சரியாகப் பார்க்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி ஆசிய கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணி பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடாது என இந்திய அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், பல நாடுகள் பங்கேற்று விளையாடும் பலதரப்பட்ட தொடர்களில் இந்திய அணி பங்கேற்று விளையாடுவதில் எந்த ஒரு கட்டுப்பாடும் அரசாங்கத்தின் தரப்பில் விதிக்கப்படவில்லை.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.