
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேச அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹாசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இமோன் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின், தௌகித் ஹிரிடாய் 8 ரன்களிலும், மஹேதி ஹாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
நிதானமாக விளையாடிய கேப்டன் லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, ஜேக்கர் அலி மற்றும் ஷமிம் ஹொசைன் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ஷமிம் ஹொசைன் 34 பந்துகளில் 42 ரன்களும் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஜேக்கர் அலி 34 பந்துகளில் 41 ரன்கள் (2 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். இறுதியில் வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா மற்றும் துஷ்மந்தா சமீரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.