
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கௌதம் கம்பீர் கூறியதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.
அரசியல் வேறு விளையாட்டு வேறு. இந்த விஷயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாங்கள் பிசிசிஐ மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இதுதான். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினார் என்றார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதால், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.