
ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மா, திலக் வர்மாவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
அதன்படி, சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 58 ரன்களும், சைம் அயூப், முகமது நவாஸ் தலா 21 ரன்களும், ஃபர்ஹின் அஸ்ரஃப் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் சுப்மன் கில் 47 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டும் ஆகினர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களம் புகுந்து 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், திலக் வர்மா சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.