
கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான முடிவுகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக நாங்கள் சிறப்பாக தயாராகியுள்ளோம். கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். கடந்த சில ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறினோம். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்தது எனக்கு நினைவிருக்கிறது. அந்த தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். எங்களிடம் 15 பேர் கொண்ட வலுவான அணி உள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால், இந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்களிடம் சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருப்பதால் பந்துவீச்சுத் தெரிவுகளும் நிறைய இருக்கின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நீண்ட தொடர் என்பதால், ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
துணைக் கண்டத்தில் உள்ளூர் அணிகள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் எப்போதும் வலுவான அணிகள். ஒவ்வொரு எதிரணியும் சவாலளிக்கக் கூடியவர்களே. துணைக் கண்டத்தில் நடைபெறுவதால், சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகள் உலகக் கோப்பையை வெல்ல முழுத் தயாரிப்பில் உள்ளனர். அதனால், எந்த ஒரு போட்டியும் எளிதாக இருக்கப் போவதில்லை என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி, ஐசிசி நடத்தும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வரை முன்னேறியது. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்டது.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உத்வேகத்தில் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பைத் தொடரில் களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.