
இலங்கை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரர் ஹுசைன் தலத் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதினால் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்கள் எடுக்க, அடித்து விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் ஹுசைன் தலத் 4 பவுண்டரிகளுடன் 32, முகமது நவாஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஹுசைன் தலத் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தினார். 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், ஆல் ரவுண்டராக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது:
இந்தியாவுடன் போட்டியில் தோற்றது, அனைவருக்கும் நல்லதாக இருக்கவில்லை. அதேசமயம், இலங்கை போட்டிக்கு வரும்போது யாருக்கும் கவலையில்லை. எங்களது சிறந்த பங்களிப்பை அளித்தோம்.
எங்களைச் சுற்றி விமர்சனங்கள் இருப்பது தெரியும். கவனமாக அதைப் புறக்கணித்தோம்.
சில நேரங்களில் முக்கியமான போட்டிகளில் விமர்சனங்கள் அணிக்கு நல்லதல்ல என நினைக்கிறேன்.
எங்களது அணியில் நல்ல சூழல் இருக்கிறது. தொடர்ச்சியாக விளையாடி வருகிறோம். சரியாக விளையாடாவிட்டால் மாற்றப்படும் என்ற முந்தைய நிலை தற்போது மாறியிருக்கிறது.
இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கிறது. அதில் நன்றாக விளையாடினால் கோப்பை எங்களுக்கு வரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.