
ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது. துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில், ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். ஆசிய கோப்பையை வெல்வதற்கு கண்டிப்பாக இந்திய அணிக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள், நான் பாத்திருக்கிறேன், பலரும் பார்த்திருக்கிறோம்.
ஒருவரின் சிறப்பான ஆட்டம், ஒருவரின் சிறந்த பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்ல இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என நம்புகிறேன். இறுதியில், சிறந்த அணி கோப்பையை வெல்லும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.