
பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய பேசியதாகவும், அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்ததாகவும் இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய பேசியதாகவும், அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்ததாகவும் இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நான் பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள். ஆனால், அவர்களுக்கு நான் பேட்டிங்கின் மூலம் பதில் கூற விரும்பினேன். தற்போது, நிறைய விஷயங்கள் பேசியவர்கள் எங்கென்றே தெரியவில்லை. திடலில் உள்ள ரசிகர்கள் வந்தே மாதரம் பாடியது புல்லரிக்கச் செய்தது. பாரத் மாதா கி ஜெய் எனக் கூற விரும்புகிறேன் என்றார்.
இந்திய அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த இணை 60 ரன்கள் சேர்த்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவியது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி குறித்து ஷிவம் துபே பேசியதாவது: என்னுடைய பேட்டிங்கும் எதிரணிக்கு பதிலளித்ததாக நினைக்கிறேன். என்னிடம் பேசுவதற்கு அவர்களுக்கு ஒன்றும் இருக்கவில்லை. எனது சிறப்பான பந்துவீச்சுக்கு பின்னணியில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது. மிகவும் முக்கியமானப் போட்டியில் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. இறுதிப்போட்டி மிகவும் சிறப்பானதாக அமைந்தது என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 69* ரன்களும், ஷிவம் துபே 22 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.