பாகிஸ்தானின் சூப்பர் 8 சுற்று கனவைக் கலைக்க காத்திருக்கிறதா நமீபியா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி நமீபியாவை எதிர்கொள்வது தொடர்பாக...
Pakistan team players
பாகிஸ்தான் அணி வீரர்கள்படம் | AP
Updated on
3 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 7 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

மீதமுள்ள ஒரு இடத்துக்கு குரூப் ஏ பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலை மாறி, பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு சற்று கடினமாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்திய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், நமீபியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

நமீபியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம், குரூப் ஏ பிரிவில் அமெரிக்க அணி புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானைக் காட்டிலும் நல்ல நெட் ரன் ரேட்டில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதுதான். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் எந்த ஒரு சிரமமுமின்றி சூப்பர் 8 சுற்றுக்கு எளிதில் தேர்வாகிவிடும். ஆனால், தோல்வியடைந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு மிகவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்க அணியின் நெட் ரன் ரேட் +0.788 ஆக உள்ளது. அதே சமயம், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் -0.403 ஆக உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இந்த இரண்டு அணிகளில் சூப்பர் 8 சுற்றுக்கு யார் தகுதி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் நமீபியா உள்ளது என்று கூறலாம்.

பாகிஸ்தான் அணியின் பிரச்னை என்ன?

சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வலிமையாக இல்லை.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் சைம் ஆயுப் மட்டுமே அந்த அணிக்கு ஆறுதலளிக்கும் விதமாக விளையாடுகின்றனர். இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் நன்றாக விளையாடினார். கேப்டன் சல்மான் அலி அகா இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடத் தவறினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கானை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவருமே மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் மிகவும் சராசரியாக இருப்பது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிரூபணமானது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், பந்துவீச்சிலும் சில முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கினார். அணியின் பிரதான பந்துவீச்சாளர் என்கிற முறையில் அவர் பொறுப்புடன் பந்துவீச வேண்டியிருக்கிறது.

நமீபியாவுக்கு எதிராக விளையாடவுள்ள வாழ்வா? சாவா? போட்டியில் சிறப்பாக பந்துவீசி பவர்பிளேவில் ஷாகின் ஷா அஃப்ரிடி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பவர்பிளேவில் பாகிஸ்தான் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொருத்தே ஆட்டத்தின் முடிவு அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

பந்துவீச்சில் மட்டுமின்றி, பவர்பிளேவில் பேட்டிங்கிலும் பாகிஸ்தான் மிகவும் நன்றாக செயல்பட வேண்டும். இந்தியாவுக்கு எதிராக கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் பவர் பிளேவில் நன்றாக விளையாடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.

என்ன செய்ய காத்திருக்கிறது நமீபியா?

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள நமீபியா, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. வெற்றி பெறாவிட்டாலும் ஒவ்வொரு போட்டியிலும் நமீபியா விளையாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் மிகவும் புத்திசாலித்தனமாக பந்துவீசுவதைப் பார்க்க முடிந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களை விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பந்துவீச ஓடி வந்து பாதியிலேயே நின்று பந்துவீசுவது, நடுவருக்கு அருகில் நின்று பந்துவீசுவது என அவரது பந்துவீச்சில் பல கலவையான யுக்திகளைக் காண முடிந்தது.

இந்திய அணியின் முக்கிய வீரர்களான திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல் விக்கெட்டுகளை வீழ்த்திய எராஸ்மஸ், தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு எதிராக என்ன செய்ய காத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

சிறிய அணிகளை எளிதில் வீழ்த்தி விடலாம் என இனி யாராலும் கூற முடியாது என்ற நிலை நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் உருவாகியுள்ளதை நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அசோசியேட் நாடுகள் அளித்த அதிர்ச்சிகளை நாம் ஒவ்வொரு போட்டியிலும் பார்த்து கடந்து வந்துள்ளோம்.

நமீபியா அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜேஜே ஸ்மட்ஸ் பந்துவீச்சில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். தொடக்க ஆட்டக்காரர் லோரன் ஸ்டீன்காம்ப் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடினார். மேலும், ஜேன் நிக்கோலஸ் ஃபிரைலிங்க் மற்றும் ஜேன் நிக்கோல் லாஃப்டி ஈட்டன் நமீபியாவின் பேட்டிங்குக்கு வலிமை சேர்க்கின்றனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து நமீபியா வெளியேறிவிட்டது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக நமீபியா விளையாடவுள்ள போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் எளிதில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா அல்லது பாகிஸ்தானின் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் கனவை நமீபியா கலைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாகிஸ்தான் மற்றும் நமீபியா இடையேயான போட்டி நாளை (பிப்ரவரி 18) கொழும்பில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding Pakistan's upcoming match against Namibia in a crucial match to qualify for the Super 8 round of the T20 World Cup...

Pakistan team players
பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com