

இங்கிலாந்தில் நடைபெறும் ஹன்ட்ரட் லீக் தொடரில் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான பங்குகளைக் கொண்டுள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறமாட்டர்கள் என்றும், ஏலத்திலும் பாகிஸ்தான் வீரர்களை இந்த அணிகள் எடுக்க முன்வரமாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல், பாகிஸ்தானின் பிபிஎல் போன்று இங்கிலாந்தில் ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட எட்டு அணிகள் இருக்கின்றன.
ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலம் வருகிற மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. இதில், 710-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். குறிப்பிடத்தக்க விஷயமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா, உஸ்மான் தாரிக், சைம் அயுப், ஷாகீன் ஷா அப்ரிதி, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, அப்ரார் அகமது மற்றும் இமாத் வாசிம் உள்பட 63 வீரர்கள் ஏலத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனப் பங்குகளை அதிகமாகக் கொண்டுள்ள இந்த அணிகள், ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தங்கள் அணியில் எடுக்கமாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. மேலும், 2009 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் நடத்திய தாக்குதலில் 140-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், ஐசிசி தொடர்களிலும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான திடல்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரு அணி வீரர்களும் போட்டியின் போது கைகுலுக்குவதையும் தவிர்த்து வருகின்றன.
இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவைச் சார்ந்த அணிகளில் விளையாடியிருக்கின்றனர். கரீபியன் லீக்கில் பார்படோஸ் ராயல்ஸ் அணிக்காக அஜம் கான், பெண்கள் அணிக்காக பாத்திமா சனா, ட்ரிபாங்கோ அணிக்கான யாஷிர் ஷா, ஷதாப் கான், முகமது ஹுசைன் உள்ளிட்டோரும் விளையாடியுள்ளனர். இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா சார்ந்த அணிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா சார்ந்த அணிகளால் ஏலத்தில் எடுக்கப்படமாட்டார்கள் என்ற தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுவரை 18 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 50-க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.