ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிரணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மகளிரணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அடிலெய்டில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 82 ரன்களும் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 46 பந்துகளில் 59 ரன்களும் (4 பவுண்டரிகள்) எடுத்தனர். ரிச்சா கோஷ் 18 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிம் கார்த் மற்றும் கேப்டன் சோஃபி மோலினெக்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி!
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜார்ஜியா வோல் 10 ரன்கள் மற்றும் பெத் மூனி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், எல்லிஸ் பெர்ரி 1 ரன், ஃபோப் லிட்ச்ஃபீல்டு 26 ரன்கள், ஜார்ஜியா வேர்ஹம் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவரது அரைசதம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. அவர் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரேயங்கா பாட்டில் மற்றும் ஸ்ரீ சரணி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அருந்ததி ரெட்டி இரண்டு விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் தாக்குர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மகளிரணி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டாவது முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய மகளிரணி டி20 தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian women's team won the third T20I against Australia by 17 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


