

புஜாரா, ரஹானே போல விளையாட வேண்டும் என மெல்பர்ன் டெஸ்ட் தோல்வியால் துவண்டுள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அபார வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முதல்முறையாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரை இழந்தபோதும், நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை தோல்வியே காணாமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் பெரிய தோல்வியாக அமைந்தது. மேலும், ஐந்து நாள்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி வெறும் இரண்டு நாள்களிலேயே முடிவுக்கு வந்ததால் ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஆஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 152 மற்றும் 132 ரன்கள் என சுருண்டது. 15 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஃபார்மாக இது கருதப்படுகிறது.
இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து உத்தப்பா பேசுகையில், “இது வேறுபட்ட சூழல், மிகவும் கடினமான ஆடுகளம் போல இல்லை. மெல்பர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கமாக திகழும். ஆடுகளம் பிரச்சினை இல்லை. பேட்டர்கள்தான் அவ்வாறு மோசமாக விளையாடியிருக்கின்றனர்.
இந்த ஆடுகளங்கள் விளையாடத் தகுதி இல்லாதது போல இருந்தாலும், நீங்கள் சரியான நுட்பங்களைப் பயன்படுத்தி விளையாட்டுத் திறனை காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த மாதிரியான ஆடுகளங்களில் ரன் குவிக்க முடியும்.
இது பெரியளவிலான ரன் ஸ்கோரிங் ஆட்டம் கிடையாது. 300 ரன்களைக் குவிக்கக் கூடிய ஆடுகளம் இல்லையென்றாலும், 250 ரன்கள் சாத்தியமானது. நீங்கள் போராடித்தான் ஆக வேண்டும். புஜாரா, ரஹானே போன்று நீங்கள் விளையாட வேண்டும். அபோதுதான் ரன் குவிக்க முடியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.