

இங்கிலாந்து அணியை வழிநடத்த நானும், பிரண்டன் மெக்கல்லமும் சரியான நபர்கள் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது.
முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இங்கிலாந்து அணி, பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வெற்றி பெற்றது. மிகுந்த அழுத்தத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி சற்று ஆறுதலளித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
பிரண்டன் மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்துள்ளதால், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பொறுப்பிலிருந்து இந்த தொடருக்குப் பிறகு இருவரும் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியை வழிநடத்த நானும், பிரண்டன் மெக்கல்லமும் சரியான நபர்கள் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியை எதிர்காலத்திலும் வழிநடத்த நானும், பிரண்டன் மெக்கல்லமும் சரியான நபர்கள் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. பிரண்டன் மெக்கல்லமுடன் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இணைந்து பயணிக்கிறேன். நாங்கள் தற்போது இருக்கும் நிலையிலிருந்து அணியை பெரிய உயரத்துக்கு எங்களைத் தவிர வேறு யாரும் எடுத்துச் செல்வார்கள் என என்னால் கூற முடியவில்லை.
எனக்கும் பயிற்சியாளர் மெக்கல்லமுக்கும் அணியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல என்ன செய்யலாம் என யோசிப்பதற்கு நேரமிருக்கிறது. கடந்த 2010-11 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றதில்லை. எனக்கு முன்பாக கடந்த காலங்களில் அணியை வழிநடத்தியவர்களுக்கும் ஆஷஸ் தொடரின் முடிவுகள் சரியாக அமையவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தோமோ அதையே இப்போதும் செய்தால், அப்போது கிடைத்த முடிவே இப்போதும் கிடைக்கும்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக நானும், பயிற்சியாளராக மெக்கல்லமும் தொடரப் போகிறோமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நாங்கள் இருவரும் தொடர்ந்து கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் செயல்பட ஆர்வமாக உள்ளோம் என்றார்.
பிரண்டன் மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி ஆரம்பக் கட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இவர்கள் கூட்டணியில் இங்கிலாந்து அணி விளையாடிய முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றது.
இந்தக் கூட்டணியில் இங்கிலாந்து அணி விளையாடிய கடைசி 34 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம், கடந்த ஆண்டில் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக செயல்பட அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகே இவர்கள் இருவரது பொறுப்புகள் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியும் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை இழக்கும் போதெல்லாம், தலைமைப் பொறுப்புகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 0-4 என இழந்ததன் விளைவாகவே பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக தொடர விரும்புவதாக பிரண்டன் மெக்கல்லம் அண்மையில் கூறியிருந்தார். தற்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் தொடர விரும்புவதாக பென் ஸ்டோக்ஸும் கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.