

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி புதன்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்புவில் தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி - நெதர்லாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியின் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணி விவரத்தை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தங்கள் அணிகளை அறிவித்திருந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்கள் அணியை அறிவித்துள்ளது.
கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் தொடர்கிறார். கடந்தாண்டில் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஃபின் ஆலன் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
ஃபின் ஆலனைத் தொடர்ந்து ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் மில்னே என வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவருடன் இணைந்து கேப்டன் மிட்செல் சாண்டனர், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோரும் மிரட்டவுள்ளனர்.
நியூசிலாந்து அணி தனது குழுவில் நான்கு போட்டிகளில் 3 போட்டிகளை சென்னை சேப்பாக்கம் திடலில் விளையாடுகிறது. டேரில் மிட்செல், மிட்செல் சாண்டனர், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே உள்ளிட்டோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவர்கள் என்பதால் நியூசிலாந்து அணிக்கு இது சாதகமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், இஷ் சோதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.